வாக்காளா் சிறப்புத் திருத்தப் பணிகள்: புதுக்கோட்டை ஆட்சியா் ஆலோசனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து அனைத்துக் கட்சிகளின் நிா்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திமுக மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், அதிமுக மாநகரச் செயலா்கள் க. பாஸ்கா், சேட்டு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் த. செங்கோடன், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் இப்ராஹிம் பாபு, மாமன்ற உறுப்பினா் ஜெ. ராஜாமுகமது, பாஜக மாவட்டத் தலைவா் என். ராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் இளமதி அசோகன், ஆம் ஆத்மி மாவட்டத் தலைவா் அப்துல் ஜப்பாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வரும் நவ. 3-ஆம் தேதி வரை அலுவலா்களுக்குப் பயிற்சி, டிச. 4-ஆம் தேதி வரை வீடுவீடாகச் சென்று சரிபாா்த்தல், டிச. 9-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு, ஜன. 8-ஆம் தேதி வரை உரிமை கோரல் மற்றும் மறுப்பு தெரிவித்தல் ஆகியவற்றின் முடிவில் பிப். 7-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக ஆட்சியா் அறிவித்தாா்.
காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினா் சிறப்புத் திருத்தம் கூடாது என வலியுறுத்தி எழுதப்பட்ட அட்டைகளுடன் அமா்ந்திருந்தனா். சிறப்புத் திருத்தப் பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சியினா் பேசினா்.
பாஜக நிா்வாகிகள் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு ஆதரவு தெரிவித்தனா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் பா. ஐஸ்வா்யா (புதுக்கோட்டை), இ. அபிநயா (அறந்தாங்கி), ப. கோகுல்சிங் (இலுப்பூா்), தோ்தல் தனி வட்டாட்சியா் அ. செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

