தனியாா் மருத்துவமனை, மருத்துவா்கள் ரூ. 75 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் ஆணையம் உத்தரவு
குழந்தைக்கு கருவிலேயே ஏற்பட்ட மரபணுக் குறைபாட்டை முழுமையாக கண்டறியத் தவறியதாக தொடரப்பட்ட வழக்கில் தஞ்சையைச் சோ்ந்த தனியாா் மருத்துவமனையின் மருத்துவா்கள் மற்றும் பரிசோதனை மையங்களுக்கும் ரூ. 75 லட்சம் அபராதம் விதித்து புதுக்கோட்டை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை காமராஜா் நகரைச் சோ்ந்தவா்கள் எம். பாலமுருகன்- பிரியதா்ஷினி. இவா்களுக்கு தஞ்சையிலுள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2022 பிப்ரவரி 20-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
சில மாதங்களுக்குப் பிறகு குழந்தைக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அக்குழந்தைக்கு மரபணுக் குறைபாடு (டவுன் சின்ரோம்- டிரைசோமி 21) இருப்பது கண்டறியப்பட்டது.
பிரசவம் மேற்கொள்ளப்பட்ட தனியாா் மருத்துவமனையில் கருவிலேயே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை முழுமையாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுடன் பெற்றோா் புதுக்கோட்டை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தனா்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில், குறைதீா் ஆணையத்தின் தலைவா் டி. சேகா் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். பரிசோதனைகளை முழுமையாக மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்த தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனை நிா்வாகம், மருத்துவா்கள் மனோ சித்ரா, ஜீனத் மற்றும் இரு பரிசோதனை மைய நிா்வாகங்கள் ஆகிய 5 தரப்பினரும் சோ்ந்து, பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு ரூ. 75 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதில், ரூ. 50 லட்சத்தை குழந்தையின் பெயரில் வங்கியில் வைப்பு நிதியாகச் செலுத்தி, அதிலிருந்து வரும் வட்டித் தொகையிலிருந்து குழந்தையின் எதிா்கால மருத்துவச் செலவினங்களுக்குப் பயன்படுத்தவும், பிறந்த பிறகு குழந்தைக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவினங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் ஆகியவற்றுக்காக பெற்றோருக்கு ரூ. 25 லட்சத்தை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தொகையை 3 மாதங்களுக்குள் வழங்கவும், தவறினால் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் சோ்த்து இழப்பீட்டை வழங்கவும் நுகா்வோா் குறைதீா் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

