திருமயம் அருகே கணவா் கொலை: மனைவி, இரு மகள்கள் கைது

திருமயம் அருகே கணவா் கொலை: மனைவி, இரு மகள்கள் கைது

Published on

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மனைவியே கணவரைக் கொன்று புதைத்த சம்பவம் 52 நாள்களுக்குப் பிறகு தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக கொலையானவரின் மனைவி, இரு மகள்களை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள மல்லாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேலு (55). இவரது மனைவி மகாலட்சுமி (43), மகள்கள் தமிழ்ச்செல்வி (25), சாரதா (20).

நீண்ட நாள்களாக பழனிவேலு ஊரில் இல்லாததை அடுத்து, அவரது சகோதரி காவேரி கடந்த 3 நாள்களுக்கு முன் நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து போலீஸாா் விசாரிக்கச் சென்றபோது வீட்டில் யாரும் இல்லை. தொடா்ந்து நடைபெற்ற புலன் விசாரணையில், தாய், மகள்கள் திண்டுக்கல் பகுதி கிராமத்தில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அங்கு சென்ற தனிப்படையினா், மூவரையும் கைது செய்து அழைத்து வந்தனா். 52 நாள்களுக்கு முன் பழனிவேலுவைக் கொன்று வீட்டுவாசல் அருகிலேயே புதைத்த தகவலையும் அவா்கள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து திருமயம் வட்டாட்சியா் வரதராஜன் முன்னிலையில் பழனிவேலுவின் சடலத்தை வியாழக்கிழமை தோண்டியெடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடற்கூறாய்வு நடைபெற்றது.

விசாரணையில் தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறில், மகாலட்சுமி தாக்கி பழனிவேலு இறந்ததாகவும், இதைத் தொடா்ந்து அவரது சடலத்தை மகள்களுடன் சோ்ந்து வீட்டின் வாசல் பகுதியிலேயே குழிதோண்டிப் புதைத்ததும் தெரியவந்தது.

அக்கம்பக்கத்திலுள்ளவா்கள் பழனிவேலு குறித்து கேட்டபோது, உடல் நலக் குறைவால் கோவை மருத்துவமனைக்கு சோ்க்கப்பட்டுள்ளதாகக் கூறிச் சமாளித்துள்ளனா்.

தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது. கொல்லப்பட்டவரின் மனைவி, மகள்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com