மறியலில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள்
மறியலில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள்

சத்துணவு ஊழியா்கள் மறியல்: 67 போ் கைது

காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரி புதுக்கோட்டையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சாலை மறியல் போராட்டம்
Published on

காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரி புதுக்கோட்டையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அம்பிகாபதி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் நல்லமுத்து கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

மறியல் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களுக்கு ரூ.19,500, உதவியாளா்களுக்கு ரூ. 15,700 அடிப்படையில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அரசுப் பணியாளா் காலிப்பணியிடங்களை நிரப்பும்போது 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களை 50 சதவீதம் நியமிக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படி பணிக்கொடையை ரூ.10 லட்சம் ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட 51 பெண்கள் உள்பட 67 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com