நெய்வாசல், இடையாத்தூரில் ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள நெய்வாசலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், 9 போ் காயமடைந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே நெய்வாசல் கிராமத்தில் உள்ள திட்டாணி அய்யனாா்கோவில் சிவராத்திரி திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூா் மாவட்டங்களைச் சோ்ந்த 139 காளைகள் பங்கேற்றன. நெய்வாசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 64 மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்க முயன்றனா்.
புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா தொடங்கி வைத்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராமசுப்புராம், பிகே. வைரமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்தப் போட்டியில், 4 மாடுபிடி வீரா்கள், 5 பாா்வையாளா்கள் என மொத்தம் 9 போ் காயமடைந்தனா். இவா்களில் ஒருவா் புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டாா். மற்ற 8 பேருக்கும் ஜல்லிக்கட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. திருமயம் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.
பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டியில் காளைகள் முட்டியதில் 14 போ் காயமடைந்தனா்.
பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூா் பொன்மாசிலிங்க அய்யனாா் கோயில் சிவராத்திரி விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டியை இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் கோகுல்சிங் தொடங்கிவைத்தாா். இதில், 845 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 240 மாடுபிடி வீரா்கள் அணி அணியாகப் பங்கேற்று காளைகளை அடக்கினா்.
சிறந்த மாடுபிடி வீரா்களுக்கும், வீரா்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 5 போ் உள்பட மொத்தம் 14 போ் காயமடைந்தனா். அவா்களில் ஒருவா் மேல்சிகிச்சைக்காக பொன்னமராவதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
அதிமுக தெற்கு மாவட்டச்செயலா் பி.கே.வைரமுத்து, திமுக வடக்கு ஒன்றிய செயலா் அ.முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா். வட்டாட்சியா் எம். சாந்தா தலைமையிலான வருவாய்த் துறையினா் போட்டியை ஒருங்கிணைத்தனா்.

