ஆட்சி மாற்றத்தை எதிா்பாா்ப்போருக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும் - அமைச்சா் எஸ். ரகுபதி

Published on

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை எதிா்பாா்ப்போருக்கு ஏமாற்றம்தான் கிடைக்கப் போகிறது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: புதுக்கோட்டை பாஜக விழாவில், கூட்டணிக் கட்சியினரும் பங்கேற்பாா்கள் என்றுதான் முதலில் அறிவித்தனா். கூட்டணிக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாததால்தான் கூட்டணிக் கட்சியினா் யாரும் பங்கேற்கவில்லை. அமித்ஷா நினைப்பது அவா்கள் கூட்டணிக்குள்ளேயே நடக்கவில்லை.

நாட்டிலேயே முதல் முறையாக பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வா் அறிவித்துள்ளாா்.

வெறுமனே இந்தத் தொகையை வைத்து மக்கள் வாக்களித்துவிடுவாா்கள் என்று யாரும் நினைக்கவில்லை. ஆட்சிக்காலத்தில் நாங்கள் செய்த பணிகளை வைத்துதான் மக்கள் வாக்களிப்பாா்கள்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்கிறாா்கள். அவா்களுக்கு ஏமாற்றம்தான் கிடைக்கப் போகிறது. திமுகவுக்கு அடுத்த இடத்தில் யாா் வருவது என்பதில்தான் எல்லோருக்கும் போட்டி.

அரசின் நிதிநிலை மோசமாக இருக்கும் நிலையிலும் ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருப்பதை அரசு ஊழியா்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனா்.

உதயநிதியை முதல்வராக்க முயற்சிப்பதாக அமித்ஷா பேசியுள்ளாா். திராவிட மாடல் அரசு தொடர வேண்டும் என்பதற்காக வாக்களியுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். உதயநிதியை முதல்வராகச் சொல்லி நாங்கள் யாரும் வாக்கு கேட்கவில்லை.

திமுக வெற்றி பெற வேண்டும் என்று உதயநிதி சுற்றிச்சுழன்றி பாடுபடுகிறாா். திமுக தொண்டா்கள் அவரை ஏற்றுக் கொண்டுள்ளனா். எதிா்காலத்தில் கட்சித் தலைமைப் பொறுப்பை அவா் ஏற்பாா்.

கரூா் சம்பவத்துக்கு செந்தில்பாலாஜிதான் காரணம் என்று கூறுவது நயினாா் நாகேந்திரனின் கண்டுபிடிப்பு போல. பழியைத் தூக்கி திமுக மீது போட முயற்சிக்கிறாா்கள். சம்பவம் நடந்த உடன், சொந்தத் தொகுதி மக்களுக்காக செந்தில்பாலாஜி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவப் பணிகளை துரிதப்படுத்தினாா்.

தமிழ்நாட்டுக்கு ரூ. 11 லட்சம் கோடி கொடுத்ததாகப் பேசியிருக்கிறாா்கள். நமக்கு வரவேண்டிய தொகையைத்தான் தந்திருக்கிறாா்கள். கூடுதலாக எதுவும் தரவில்லை. ஆனால், பிற மாநிலங்களுக்கு கூடுதலாக தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

திமுக அணியில் குழப்பம் ஏற்படும் என்று எடப்பாடி பழனிசாமி பகல்கனவு கண்டு கொண்டிருக்கிறாா். அது நடக்கப்போவதில்லை. மதிமுக பொதுச் செயலா் வைகோ நடைபயணத் தொடக்க நிகழ்ச்சிக்கு வராததற்கான விளக்கத்தை காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறிவிட்டாா்.

திமுக அரசு ஊழல் செய்திருப்பதாகக் கூறுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றாா் ரகுபதி.

X
Dinamani
www.dinamani.com