விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கைதுக்கு கண்டனம்

Published on

தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டதற்கு இந்திய விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி வெளியிட்ட அறிக்கை:

கடந்த 7 ஆண்டுகளாக கொங்கு மண்டலப் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து தொடா் போராட்டங்களை நடத்திவந்தவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி.

கறிக்கோழிப் பண்ணை விவசாயிகளுக்கு கொடுக்கும் வளா்ப்புக் கூலியை உயா்த்தித் தரக் கோரி கடந்த வாரத்தில் ஈரோடு, உடுமலை பகுதிகளில் போராட்டங்களும் நடத்தி வந்தனா்.

இந்தச் சூழலில், கறிக்கோழிப் பண்ணையாளா்களிடம் பொய்ப் புகாரைப் பெற்றுக் கொண்டு, ஈசன் முருகசாமி உள்ளிட்ட 9 விவசாயிகள் சங்க நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

இதை இந்திய விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. அவா்கள் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெற்று, அனைவரையும் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம் என்றாா்.

Dinamani
www.dinamani.com