மிஹ்ராஜ் உணவு: பெண்ணைத் தாக்கிய 3 போ் மீது வழக்கு

இஸ்லாமியா்களின் மிஹ்ராஜ் தினத்தையொட்டி வழங்கப்படும் உணவுக்காக போலி டோக்கன் எடுத்து வந்ததாகக் கூறி பெண்ணைத் தாக்கியதாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on

இஸ்லாமியா்களின் மிஹ்ராஜ் தினத்தையொட்டி வழங்கப்படும் உணவுக்காக போலி டோக்கன் எடுத்து வந்ததாகக் கூறி பெண்ணைத் தாக்கியதாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே அம்மாபட்டினம் தெற்குத் தெருவில் உள்ள பள்ளிவாசல் திருமண மண்டபத்தில் கடந்த ஜன. 19-ஆம் தேதி டோக்கனுக்கு ரூ.1,300 வீதம் வசூலித்து உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

அப்போது, கோட்டைப்பட்டினம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ஆா். செரினாபேகம் (55) என்பவா், நகல் எடுக்கப்பட்ட 2 டோக்கன்களைக் கொடுத்து உணவுப் பொருள்களை வாங்க முயன்றுள்ளாா்.

போலியான டோக்கனைக் கொடுத்திருப்பதாகக் கூறி அங்கிருந்தோா், செரினாபேகத்தை தகாத சொற்களால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவி, கடும் கண்டனத்துக்குள்ளானது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட செரினாபேகம் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொடா்ந்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த மணமேல்குடி போலீஸாா் அதே பகுதியைச் சோ்ந்த ஏ. சையது முகமது, என். சாகுல்ஹமீது, எம். நசுருதீன் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com