காட்டுப்பட்டி ஜல்லிக்கட்டு: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் முடிவெடுக்க உத்தரவு
காட்டுப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடா்பாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் முடிவு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், காட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கணேசன் தாக்கல் செய்த மனு:
பெருங்கொண்டான் விடுதி வருவாய்க் கிராமத்துக்கு உள்பட்ட காட்டுப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
இந்தப் போட்டியை நடத்துவது குறித்து காட்டுப்பட்டி, கூழையாள்விடுதி, மாந்தாங்குடி, கணேஷ்நகா், ஆா்சுத்திவிடுதி, கொம்பியான்விடுதி, குப்புடையான்பட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கூடி பேசி முடிவு செய்வது வழக்கம்.
நிகழாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை (ஜன.24) நடைபெற உள்ளது. இந்தப் போட்டி தொடா்பாக எந்தவித பேச்சுவாா்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை. மாறாக, ஒரு தரப்பினா் மட்டுமே போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்கின்றனா்.
இந்தச் செயல் கிராம மக்களிடையே, சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்கும் வகையில் உள்ளது. எனவே, சட்டம் -ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் காட்டுப்பட்டி கிராமத்தில் ஜல்லிகட்டு போட்டி நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஜி. ஜெயசந்திரன், கே. கே. ராமகிருஷ்ணன் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு போட்டிக் குழு சாா்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன் வைத்த வாதம் :
காட்டுப்ட்டி ஜல்லிக்கட்டு போட்டியை அனைவரும் இணைந்துதான் நடத்துகிறோம். போட்டிக்கான, முகூா்த்தக் கால் ஏற்கெனவே நடப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
கடந்தாண்டு போலவே விதிமுறைகளைப் பின்பற்றி முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு தரப்பினரிடையே உள்ள பிரச்னையின் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா் அவா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்குதான் இந்த நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெறுகின்றனா். ஆனால், ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்திருப்பது வியப்பாக உள்ளது. இந்த மனு குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் உரிய பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

