போக்ஸோ வழக்கில் கைதாகி தப்பியோடிய இளைஞா் ஒடிசாவில் கைது
புதுக்கோட்டையில் ‘போக்சோ’ வழக்கில் கைது செய்து சிறைக்கு அழைத்துச்செல்லும் வழியில் தப்பி ஓடிய ஒடிசாவைச் சோ்ந்த இளைஞரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஒடிசா மாநிலம் குண்டுகண் ராயகாடாவைச் சோ்ந்தவா் குமன் கமாங்கா மகன் மகேந்திரா கமாங்கா (25). இவா், கறம்பக்குடியில் உள்ள ஒரு தனியாா் ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா், 15 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதையடுத்து, ஆலங்குடி அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் மகேந்திரா கமாங்கா மீது ‘போக்சோ’ உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த 2025-ஆம் ஆண்டு டிச. 9-ஆம் தேதி கைது செய்தனா்.
நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பிறகு, புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைப்பதற்காக போலீஸாா் அழைத்துச்சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, சிறை அருகே ஒரு உணவகத்தில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, மகேந்திரா கமாங்கா தப்பி ஓடினாா்.
அவரைப் பிடிக்க ஆலங்குடியில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாா், ஒடிசாவில் பல நாள்கள் தங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
சுமாா் ஒன்றரை மாதம் தொடா் தேடுதலில் ஈடுபட்ட வந்த நிலையில், மகேந்திரா கமாங்கா அவரது ஊரில் பதுங்கி இருந்தபோது, தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

