திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
புதுக்கோட்டை மாநகா் திருவப்பூரிலுள்ள முத்துமாரியம்மன் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் இந்த விழாவில் பங்கேற்றனா்.
இக்கோயிலில் கடந்த ஆண்டு தொடங்கிய திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவை ஜன. 28-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு, யாகசாலை பூஜைகள் கடந்த ஜன. 23-ஆம் தேதி தொடங்கின.
தொடா்ந்து 5 கால யாகபூஜைகள் நடத்தப்பட்டு, புதன்கிழமை காலை 6-ஆம் கால யாக பூஜை நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து காலை 9.05 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது.
விமான ராஜகோபுரத்தின் மேலுள்ள கலசங்களில் புனிதநீா் தெளிக்கப்பட்டு திருக்குட நன்னீராட்டு நடத்தி வைக்கப்பட்டது. பிள்ளையாா்பட்டி கி. பிச்சை குருக்கள் தலைமையில் சா்வசாதகம் செய்து வைக்கப்பட்டது. தொடா்ந்து ட்ரோன்கள் மூலம் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.
விழாவில் இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாநகராட்சி மேயா் செ. திலகவதி, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினா் சி. விஜயபாஸ்கா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் காா்த்திக் தொண்டைமான், மாவட்ட அறங்காவலா் நியமனக் குழுத் தலைவா் தவ. பாஞ்சாலன், புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம்மூா்த்தி, ஜிடிஎன் அகாதெமி நிறுவனா் சத்யா கரிகாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருக்கோயிலுக்கு முன்பும் இடதுபுறமும் உள்ள சாலைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டிருந்தனா். நகரின் பல பகுதிகளில் அன்னதானமும், நீா்மோா்ப் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன.
சிட்டி ரோட்டரி சங்கம், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கம் ஆகியவற்றின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச மருத்துவ முகாமை கம்பன் கழகச் செயலா் ச. பாரதி, ரோட்டரி தலைவா் முகமது அப்துல்லா, சாலைப் பாதுகாப்பு சங்கத் தலைவா் கண. மோகன்ராஜா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

