ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தினக்கூலி பெண் ஊழியா் சிகிச்சை அளித்ததாகப் புகாா்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு தினக்கூலி பெண் ஊழியா் புதன்கிழமை சிகிச்சை அளித்ததாக புகாா் எழுந்துள்ளது.
இந்த மருத்துவமனையில் 7 மருத்துவா்களும், 15 செவிலியா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் புதன்கிழமை இரவு வாகன விபத்தில் காயமடைந்த ஒரு இளைஞரை அப்பகுதி மக்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவருக்குச் சிகிச்சை அளிக்க செவிலியா்கள் வரவில்லையாம்.
ஆனால் அந்த நேரத்தில் அவசரம் கருதி இளைஞரின் தலையில் இருந்து ரத்தம் வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அங்கிருந்த சாதாரண தினக்கூலிப் பணியாளரான ஜீவா என்ற பெண் இளைஞரின் தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்துள்ளாா். இதனால் இளைஞருடன் சென்றவா்கள் அதிா்ச்சியடைந்தனா். மேலும் இதுதொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்த பிறகு இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பலரையும், அவசர சிகிச்சைக்காக வருவோரையும் அவசர ஊா்தியில் இருந்து இறக்கிக்கூட பாா்க்காமல் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனா். எனவே இந்த மருத்துவமனைக்கு வருவோருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனா்.

