ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி: முதல்வர் திறந்துவைத்தார்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

ஒரத்தநாட்டில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணை வளாகத்தில் 177.92 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் கல்லூரி அமைக்கப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

இதனடிப்படையில், கட்டடங்கள் கட்டப்பட்டு முதலாமாண்டு மாணவர்களுக்குத் தேவையான 7 துறைகள், விடுதி வசதி, கால்நடை சிகிச்சை வளாகம் மற்றும் கால்நடை பண்ணை வளாகம் போன்ற உட்கட்ட வசதிகள் செய்யப்பட்டன. மேலும், அரசு கால்நடை மருத்துவக் கழகத்தின் அங்கீகாரம் பெறப்பட்டு, முதலாமாண்டு மாணவர் சேர்க்கையும் நிறைவு பெற்றது.

முதலாம் ஆண்டு பட்டப் படிப்பில் 22 மாணவர்கள், 18 மாணவிகள் உள்பட 40 பேர் பல்கலைக்கழகத்தால் ஒற்றைச் சாளர முறையில் தேர்வுசெய்யப்பட்டனர். மேலும், கல்லூரிக்கான முதன்மை கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுமார் ரூ. 12 கோடியில் கட்டுமானப் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஒரத்தநாட்டில் புதிதாகக் கட்டப்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

ஒரத்தநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன், தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் 177 ஏக்கரில் இயற்கையான சூழலில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடங்கி, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு தொழிற்கல்வி வழங்கியதோடு, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி, தஞ்சை மாவட்டத்தில் கல்வி புரட்சி ஏற்படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் சி. வீரபாண்டியன், பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் உறுப்பு கல்லூரி முதல்வர் மணிமேகலை, ஒரத்தநாடு ஒன்றியக் குழுத் தலைவர் சூரியமூர்த்தி, அதிமுக நகரச் செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com