பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களில் விவசாயம், வீட்டு உபயோகம், மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டிற்கு வண்டல் மண், சவ்வூடு மண், களிமண் போன்ற கனிமங்களை இலவசமாக எடுப்பதற்கான அனுமதி வழங்கும் சிறப்பு முகாம் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேசிய ஆட்சியர், இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு ஏரி, குளங்களை தூர்வாருவதோடு, விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களுக்குத் தேவையான வண்டல் மண்ணையும், களி மண்ணையும் இலவசமாக எடுத்துச் சென்று பயன்பெற வேண்டும் என்றார்.
ஆய்வின்போது, பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி. சேகர், கோட்டாட்சியர் ஆர். கோவிந்தராசு, வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பேராவூரணியில்...: பேராவூரணி பகுதி ஏரி, குளங்களில் மண் எடுப்பது தொடர்பான சிறப்பு முகாம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியர் கே. ரகுராமன் முகாமிற்கு தலைமை வகித்துப் பேசுகையில், விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் சம்பந்தபட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய சான்று பெற்று விண்ணப்பம் அளிக்க வேண்டும். பேராவூரணி பகுதிகளில் உள்ள காட்டாறுகளில் அனுமதியின்றி மணல் அள்ளக்கூடாது, மணலை பதுக்கி விற்பனை செய்யக் கூடாது, மாட்டுவண்டிகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.
முகாமில், மண்டல துணை வட்டாட்சியர் தெய்வானை மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.