மன்னர் சரபோஜி பிறந்த நாள் விழா: 9 நூல்கள் வெளியீடு

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மஹாலில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்னர் சரபோஜியின் 240 ஆவது பிறந்த நாள் விழாவில் 9 புதிய நூல்கள் வெளியிடப்பட்டன.
Updated on
1 min read

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மஹாலில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்னர் சரபோஜியின் 240 ஆவது பிறந்த நாள் விழாவில் 9 புதிய நூல்கள் வெளியிடப்பட்டன.
இதில், முனைவர் க. அன்பழகன் பதிப்பித்த "வாக்குண்டாம் - நல்வழி', சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர் மணி.மாறன், ஆசிரியர் கோ. ஜெயலட்சுமி பதிப்பித்த "திருவேங்கடமாலை',  தெலுங்கு மொழி பண்டிதர் டி. ரவி பதிப்பித்த "கிராதவிலாசமு', கும்பகோணம் அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர் ஜெ. ஜெயவாணிஸ்ரீ பதிப்பித்த "சிவயோக தீபிகை, செவ்வந்திப்புராணம்', எம். ராமமூர்த்தி சாஸ்திரி பதிப்பித்த "ஆபஸ்தம்ப பூர்வப்ரயோக ரத்னாவளி', சரஸ்வதி மகால் நூலக பதிவுரு எழுத்தர் மூ. நேரு பதிப்பித்த "நட்சத்திர பொருத்தமும், பலனும்', கோ. தில்லை கோவிந்தராஜன் பதிப்பித்த "விக்கிரம சோழனுலா', முனைவர் ஆ. குணசேகரன் பதிப்பித்த "தஞ்சை சரசுவதி மகால் நூலக வளர்ச்சி வரலாறு' ஆகிய 9 நூல்கள் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டன.
மேலும், மறுபதிப்பு செய்யப்பட்ட புலிப்பாணி சுந்தரவரதாச்சாரியாரின் பஞ்சபட்சி சாஸ்திரம், பாவலரேறு ச. பாலசுந்தரத்தின் திருநல்லூர் புராணம் வெளியிடப்பட்டன.
நூல்களை வெளியிட்டு, பதிப்பாசிரியர்களைக் கெளரவித்த வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு பேசியது:
மாமன்னர் சரபோஜி அனைத்து மொழிகளிலும் சிறந்து விளங்கினார். சரஸ்வதி மகால் நூலகத்தில் நூல்கள் மட்டுமல்லாமல் பழங்காலத்து ஓலைச்சுவடிகளும் வைக்கப்பட்டுள்ளன.  
இதில் கலை, இலக்கியம், மருத்துவம், விஞ்ஞானம், மனையியல் போன்ற உலகத்துக்குத் தேவையான அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் அழைத்து வந்து இந்த நூலகத்தைக் காண்பித்து சிறப்புகளை எடுத்துக் கூற வேண்டும். உலகப் புகழ்பெற்ற இந்த நூலகத்தை ஆராய்ச்சியாளர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் துரைக்கண்ணு. நூல்களை அன்பளிப்பாக வழங்கியவர்களை மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் கெளரவித்தார்.
மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன், மாவட்ட வருவாய் அலுவலர் ந. சக்திவேல், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன், முதன்மைக் கல்வி அலுவலர் எம்.கே.சி. சுபாஷினி, சரசுவதி மகால் நூலக நிர்வாக அலுவலர் (பொறுப்பு)  மா. ராமகிருட்டிணன், ஆயுள் கால உறுப்பினர் சிவாஜி ராஜா து. போன்ஸ்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அரண்மனை வளாகத்தில் உள்ள மாமன்னர் சரபோஜி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

மராட்டிய சமூகத்தினர் கண்டனம்
மாமன்னர் சரபோஜியின் பிறந்த நாள் ஆண்டுதோறும் செப். 24-ம் தேதி அரசு சார்பில் விழா கொண்டாடப்பட்டு, சரபோஜி சிலைக்கு மாலை அணிவிக்கப்படும். இந்நிலையில், இந்த விழாவை 4 நாள்களுக்கு முன்பே அரசு சார்பில் கொண்டாடப்பட்டதற்கு மராட்டிய சமூகத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மேலும் கூறியது:
சரபோஜியின் பிறந்த நாள் விழாவை 4 நாட்கள் முன்னதாக அரசியல் விழாவாக மாற்றி நடத்தியுள்ளதைக் கண்டிக்கிறோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com