நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சி - நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

நிலக்கடலை பயிரை தாக்கும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.

நிலக்கடலை பயிரை தாக்கும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேராவூரணி வேளாண்மை கோட்ட உதவி இயக்குநர் ஆர். மதியரசன் தெரிவித்துள்ளதாவது:
பேராவூரணி வேளாண் வட்டத்தில் நடப்பு ராபி பருவத்தில் சுமார் 1500 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நிலக்கடலையை பொருத்தமட்டில், இளம் பயிர்களில் சுருள்பூச்சி தாக்குதலும் சற்று வளர்ந்த பயிர்களில் புரடீனியா புழுவும் பரவலாக தாக்கியுள்ளன.
இவற்றை கட்டுப்படுத்திட வயல்களில் இரவு 8 மணி முதல் 11 மணி வரை விளக்குப்பொறி வைத்து தாய் அந்துப்பூச்சியின் நடமாட்டத்தை கண்காணித்து தக்க பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுருள்பூச்சியை கட்டுப்படுத்திட டைகுளோர்வாஸ் 250 மில்லி (அல்லது) குளோர்பைரிபாஸ் 500 மில்லி (அல்லது) மானோகுரோட்டபாஸ் 300 மில்லி இதில் ஏதேனும் ஒரு மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
புரடீனியா புழுக்களை கட்டுப்படுத்திட வரப்புகளில் பொறி பயிராக தட்டைப்பயறு, ஆமணக்கு, மக்காசோளம் ஆகியவற்றை விதைக்க வேண்டும். இதனால் தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும் நன்மை செய்யும் பூச்சிகள் பெருக வாய்ப்புள்ளது. வயல்களில் உள்ள புழுக்களை தின்று அழிக்கும் வகையில் பறவைகள் வந்து அமர்வதற்கு இருக்கைகள் அமைக்க வேண்டும். நிலக்கடலை மற்றும் பொறிப்பயிர்களின் இலைகளில் உள்ள இளம் புழுக்களை கையால் எடுத்து நசுக்கி அழிக்க வேண்டும்.
புரடீனியா தாய் அந்துப் பூச்சிகளுக்குண்டான இனக்கவர்ச்சி பொறியினை வயலில் 4 - 5 இடங்களில் வைக்க வேண்டும். 100 புரடீனியா புழுக்களிலிருந்து சேகரிக்கப்பட்ட என்.பி.வி வைரஸ் கரைசலை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து அதோடு 1 கிலோ வெல்லப்பாகு மற்றும் 100 மில்லி ஒட்டுத்திரவம்(டீபால்) கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் மாலை வேளையில் தெளிக்க வேண்டும். நோய்களை பொருத்தமட்டில் வேர் அழுகல் நோய் துருநோய் டிக்கா இலைப்புள்ளி நோய் முக்கியமானதாகும்.
வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்திட ஒரு ஏக்கருக்கு 1 கிலோ சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பாக்டீரியாவை 20 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து விதை விதைத்த 30 நாள்கள் கழித்து செடியை சுற்றி வைத்து மண் அணைக்க வேண்டும்.
துருநோய் மற்றும் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்திட ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசிம் 100 கிராம் மற்றும் மேங்கோசெப் 400 கிராம் (அல்லது) குளோரோதளோனில் 400 கிராம் இதில் ஏதேனும் ஒன்றினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com