தஞ்சாவூர் பத்திரப்பதிவுத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, இணை சார்பதிவாளர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தின் பின்புறத்தில், பத்திரப் பதிவுத் துறையின் ஒருங்கிணைந்த பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக மாவட்ட ஆய்வுக் குழுவிலிருந்து, தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் அலுவலகத்துக்குப் புகார் சென்றது.
இதைத் தொடர்ந்து, இப்பிரிவின் காவல் துணைக் கண்காணிப்பாளர் மனோகரன், ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் திங்கள்கிழமை ஒருங்கிணைந்த பதிவாளர் அலுவலகத்தில் சோதனையைத் தொடங்கினர். இந்தச் சோதனை நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்தது. அப்போது, கணக்கில் வராத ரூ. 1.56 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், இந்த அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்ய வருபவர்களிடம் இணை சார் பதிவாளர் (எண் 1) எஸ். மஞ்சுளா லஞ்சம் பெற்று, அதைத் தனது உதவியாளர்களிடம் கொடுத்து வைத்து, மாலையில் வீட்டுக்குச் செல்லும்போது வாங்கிச் செல்வதும், அதுபோல, கைப்பற்றப்பட்ட தொகையும் லஞ்சமாகப் பெற்றிருப்பதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, இணை சார் பதிவாளர் - எண் 1 எஸ். மஞ்சுளா, இவரது உதவியாளர்களான திருவாரூரைச் சேர்ந்த தேவநாதன், முருகானந்தம் மற்றும் பத்திர எழுத்தர்கள் உள்பட மொத்தம் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட தொகை கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.