தொடர் தீவிபத்து: தடயவியல் துறையினர் சோதனை
By DIN | Published On : 11th April 2019 08:48 AM | Last Updated : 11th April 2019 08:48 AM | அ+அ அ- |

பேராவூரணி அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் கடந்த நான்கு நாள்களாக தொடர்ந்து பகலில் திடீரென குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்ததில் 6 வீடுகள் எரிந்து நாசமடைந்தன.
இந்த தீ விபத்து எப்படி ஏற்படுகிறது; காரணமென்ன என தெரியாமல் இப்பகுதி மக்கள் குழப்பத்திலும், அச்சத்திலும் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், தஞ்சை மண்டல தடய அறிவியல்துறை துணை இயக்குநர் பாலமுருகன் தலைமையிலான அறிவியல் துறை நிபுணர்கள் தீ விபத்து நடைபெற்ற வீடுகளில் புதன்கிழமை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, அங்கு கிடைத்த ஒருவகை ரசாயன பவுடரை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். வெயிலில் காய்ந்தால் தீப்பற்றக் கூடிய ரசாயன பொருளை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் குடிசைகளின் மேற்பரப்பில் வீசியதால் பகலில் தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.