22 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: உதயநிதி ஸ்டாலின்
By DIN | Published On : 11th April 2019 08:46 AM | Last Updated : 11th April 2019 08:46 AM | அ+அ அ- |

தமிழகத்தில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.
தஞ்சாவூரில் புதன்கிழமை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அவர் பேசியது:
தமிழகம் முழுவதும் 17 நாட்களாக பிரசாரம் செய்து வருகிறேன். அனைத்து இடங்களிலும் பேரெழுச்சி காணப்படுகிறது. பொதுமக்கள், கூட்டணி கட்சியினர், எதிர்கட்சித் தோழர்கள் மிகுந்த வரவேற்பு அளிக்கின்றனர். இதற்கு மோடி மீதான வெறுப்புதான் காரணம்.
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவைப் பற்றி கவலைப்படாதவர் மோடி. கஜா புயலின்போது எட்டிக்கூட பார்க்கவில்லை. எடப்பாடி பழனிசாமி ஹெலிகாப்டரில்தான் வந்தார். ஆனால் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுகவும், கூட்டணி கட்சியினரும்தான் உதவிகள் செய்தனர்.
மோடி கடந்த தேர்தலின்போது ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார். ஆனால் பத்து பைசா கூட தரவில்லை. பணமதிப்பிழப்பின்போது 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து புதிய இந்தியாவை படைக்கப் போகிறேன் என்றார். ஆனால், ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முடியாமல் 150 பேர் இறந்தனர். இதுதான் மோடியின் சாதனை.
தமிழகத்தில் 22 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். இதைத்தொடர்ந்து, ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்த நாளில் திமுக தலைமையில் ஆட்சி அமையும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.
இவர் பூக்காரத் தெருவில் தொடங்கி எம்.கே. மூப்பனார் சாலை, கீழவாசல், வடக்கு வாசல், மாமா சாகிப் மூலை, மருத்துவக் கல்லூரி மூன்றாவது வாயில் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.
இவருடன் வேட்பாளர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், டி.கே.ஜி. நீலமேகம் உடனிருந்தனர்.
புதுக்கோட்டையில்....
புதுக்கோட்டையில் திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சு. திருநாவுக்கரசரை ஆதரித்து புதன்கிழமை இரவு அவர் பேசியது:
மோடி தலைமையிலான மத்திய அரசையும், இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான மாநில அரசையும் மாற்றும் நாள் தான் ஏப். 18.
மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு மட்டும் ரூ. 5 ஆயிரம் கோடி, அவர் அணியும் சட்டையின் விலை ரூ. 15 லட்சம். ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பைத் தருகிறேன் என்றார்கள். ஆனால், ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தி உள்ளூர் தொழில்களை அழித்து பலரையும் வேலை இழக்கச் செய்ததுதான் மிச்சம். இறந்த பிறகும், மெரீனா இடப் பிரச்னையில் போராடி ஜெயித்தவர் கருணாநிதி. அவருக்குச் செய்யும் இறுதி அஞ்சலி, தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் 40 எம்.பி தொகுதிகளிலும், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றி பெறச் செய்வதுதான் என்றார் உதயநிதி.
பிரசாரத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலர் பெரியண்ணன் அரசு, பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன், நகரச் செயலர் நைனா முகமது, முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு வாக்குசேகரித்து அவர் பேசியது:
கூட்டுறவு வங்கியில் 5 பவுன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றார்.