அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர் வளர்ச்சி அடைகிறது: ஜி.கே. வாசன்

அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர் வளர்ச்சி அடைகிறது என்றார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.


அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர் வளர்ச்சி அடைகிறது என்றார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.
தஞ்சாவூர் ரயிலடியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற பிரசார நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற வாசன் மேலும் பேசியது:
தமிழகத்தில் இரு கூட்டணிகள் உள்ளன. ஒன்று மக்கள் விரும்பக்கூடிய அதிமுக தலைமையிலான கூட்டணி. மற்றொன்று மக்கள் விரோத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி. நம் கூட்டணி உறுதியாக வெற்றி பெறக்கூடியது. இதற்கு நேர்மாறாக தோல்வியுறக்கூடியது காங்கிரஸ் கூட்டணி.
அதிமுக எப்போதெல்லாம் ஆட்சி அமைக்கிறதோ, அப்போதெல்லாம் ஒன்றுபட்ட தஞ்சாவூர் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. ஆனால், திமுக ஆட்சியில் தஞ்சாவூரின் வளர்ச்சி ஸ்தம்பிக்கிறது. அதிமுக ஆட்சியின் மூலம் விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருகின்றனர்.
மத்தியில் ஆட்சி சிறப்பாகத் தொடர உள்ளது. தமிழகத்துக்கு நூறு சதவீதத் திட்டங்கள் கிடைக்கவுள்ளன. எனவே, மக்களவைத் தொகுதி தமாகா வேட்பாளர் என்.ஆர். நடராஜனுக்கு ஆட்டோ சின்னத்திலும், சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். காந்திக்கு இரட்டை சிலை சின்னத்திலும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் வாசன்.
பின்னர், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம் பேசியது:
இந்தியா 2020 ஆம் ஆண்டில் வல்லரசாகும் என அப்துல் கலாம் கூறினார். அவருடைய கனவை நிறைவேற்றக்கூடியது பாஜக கூட்டணிதான். நமக்கு நிலையான ஆட்சி தேவை. அதை காங்கிரஸ் கட்சியால் கொடுக்க முடியாது.
மற்ற மாவட்டங்களை, மாநகரங்களைவிட தஞ்சாவூர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, ஜெயலலிதாவின் ஆட்சி தொடருவதற்கு என்.ஆர். நடராஜனுக்கும், ஆர். காந்திக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் வைத்திலிங்கம். இந்நிகழ்ச்சியில் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், தமாகா மாநிலப் பொதுச் செயலர் விடியல் சேகர், வேட்பாளர்கள் என்.ஆர். நடராஜன், ஆர். காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை
கொண்டு வந்தது திமுக-காங். கூட்டணியே
ஒரத்தநாடு,  ஏப். 16: விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்தது திமுக-காங்கிரஸ் கூட்டணியே என்றார் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.
ஒரத்தநாட்டில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தமாகா வேட்பாளர் என்.ஆர். நடராஜனுக்கு ஆதரவாக திங்கள்கிழமை இரவு வாக்கு சேகரித்து வாசன் மேலும் பேசியது: ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் என விவசாயிகள் ஏற்காத திட்டங்களை இங்கு கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுக கூட்டணியே.  அதிமுக கூட்டணியானது, விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்காது. காவிரி பிரச்னை தீராமல் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் முழுமையாக நம்மை வந்தடைய பொதுமக்கள் அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றார்.  அவருடன் வேட்பாளர் என்.ஆர்.நடராஜன்,  எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com