வாக்காளர்கள் நோட்டுக்கு அடிபணிய வேண்டாம்: கி. வீரமணி
By DIN | Published On : 17th April 2019 05:21 AM | Last Updated : 17th April 2019 05:21 AM | அ+அ அ- |

வாக்காளர்கள் நோட்டுக்கு அடிபணியாமல் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே திமுக வேட்பாளர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி), டி.கே.ஜி. நீலமேகத்தை (தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி) ஆதரித்து செவ்வாய்க்கிழமை மாலை அவர் மேலும் பேசியது:
திமுக கூட்டணி கொள்கை கூட்டணி. மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. எதிர் அணியில் இருக்கும் அதிமுக கூட்டணி பேரம் பேசி அமைக்கப்பட்டது.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் கூட தெரிவிக்காதவர்தான் மோடி. அவர் இப்போது தேர்தலுக்காகத் தமிழகத்தை நாடி வருகிறார். முதல் முறை வாக்களிக்கக்கூடிய இளைஞர்கள் மோடியின் வித்தையில் மயங்கி விடக்கூடாது. அவர் கடந்தமுறை கூறிய எதையும் செய்யவில்லை. அவர் செய்தது எல்லாம் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பின்மை போன்ற நடவடிக்கைகள்தான்.
மோடி வளர்ச்சி, வளர்ச்சி என்று பேசுகிறார். ஆனால் எல்லாம் தளர்ச்சி, தளர்ச்சி தான். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படும். சர்வாதிகாரம் கட்டு அவிழ்த்து விடப்படும். உங்களை அவர்களுக்கு விற்றுவிடாதீர்கள். மோடியையும், பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. தோல்வி பயத்தால் அவர்கள் எதையும் செய்வர்.
நாம் நோட்டுக்கும், நோட்டாவுக்கும் அடிபணியாமல் அதையும் தாண்டி உதயசூரியனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். எனவே வேட்பாளர்கள் பழனிமாணிக்கம், நீலமேகத்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் வீரமணி.
வேட்பாளர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...