கும்பகோணம் சுந்தர மகா காளியம்மன் கோயிலில் படுகளக்காட்சி

கும்பகோணம் சுந்தர மகா காளியம்மன் கோயிலில் 128 ஆம் ஆண்டு பெருந்திருவிழாவை முன்னிட்டு படுகளக் காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

கும்பகோணம் சுந்தர மகா காளியம்மன் கோயிலில் 128 ஆம் ஆண்டு பெருந்திருவிழாவை முன்னிட்டு படுகளக் காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோயில் தெற்கு வீதியில் உள்ள சுந்தர மகாகாளியம்மன் கோயிலிலில் 128 ஆம் ஆண்டு பெருந்திருவிழா ஏப். 11-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
பச்சைக்காளி எனப்படும் அக்காவுக்கு குழந்தைகள் கிடையாது. தன்னுடைய தங்கையான பவளக்காளிக்கு ஏராளமான குழந்தைகள் உள்ளன. தன் தங்கையின் குழந்தைகளையும், தங்கையையும் பார்ப்பதற்காக அக்கா பச்சைக்காளி தின்பண்டங்களை வாங்கி கொண்டு, தங்கை வீட்டுக்குச் செல்கிறார்.
ஆனால் அக்காவுக்கோ குழந்தைகள் இல்லை. நமக்கு அதிகமாக குழந்தைகள்  உள்ளது. இதனை அக்கா பார்த்தால் பொறாமை கொள்வார் எனக் கருதி, அக்கா வரும் சமயத்தில் குழந்தைகளை தன் சேலையால் போர்த்தி மூடி வைத்து விடுகிறார்.
தங்கை வீட்டுக்கு வந்த அக்கா பச்சைக்காளி, தன் தங்கையின் செய்கையைப் பார்த்து, கோபம் கொண்டு, கோபித்து கொண்டு திரும்பிச் செல்கிறார்.
அப்போது குழந்தைகளை அப்படியே கற்சிலைகள் போல் இருப்பர் என சபித்துவிட்டு செல்கிறார். இதை பார்த்த தங்கை பவளக்காளி உடனடியாக, தான் செய்த செய்கையைக் கண்டு மனம் வருந்தி, அக்காவிடம் மன்னிப்புக் கேட்டு, அவரை மீண்டும் வீட்டுக்கு அழைக்கிறார். அதன்பிறகு அக்காவும் புனித நீர் தெளித்து குழந்தைகளுக்கு உயிர் வரச் செய்கிறார். இந்தச் செயலை தத்ரூபமாக விளக்கும் வகையில் படுகளக் காட்சியாக நடைபெறும்.
இந்தப் படுகளக் காட்சி கும்பகோணம் சுந்தர மகா காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நிகழாண்டு தொடங்கிய விழாவில் ஏப்.19-ம் தேதி பால்குட விழா நடைபெற்றது.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பச்சைக்காளியும்,  பவளக்காளியும் படுகளக் காட்சியைக் கண்டருளினர். அப்போது கோயில் முன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் மீது சேலையால் போர்த்தப்பட்டு,  பின்னர் அவர்கள் மேல்  மஞ்சள் நீர் தெளித்து அவர்களுடைய பாவங்களைப் போக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் பச்சைக்காளி - பவளக்காளி ஊஞ்சல் உற்சவமும்,  பின்னர் பிறந்த வீட்டுக்குச் செல்லும் வைபவமும், நகர்வலக் காட்சியும் நடைபெற்றது. தொடர்ந்து, திங்கள்கிழமை (ஏப்.22) மாலை 6 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து சக்தி கரகம், அக்னி கொப்பரையுடன் பச்சைக்காளியும்,  பவளக்காளியும் பெரிய கடைத் தெருவில் வீதி உலாவும், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு பச்சைக்காளியும், பவளக்காளியும் மீண்டும் கோயிலுக்குத் திரும்பும் நிகழ்ச்சியும், 24-ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com