தஞ்சாவூர் மாவட்டத்தில்: புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை
By DIN | Published On : 26th April 2019 05:15 AM | Last Updated : 26th April 2019 05:15 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டத்தில் புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அலுவலர்களுக்கு ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வியாழக்கிழமை அறிவுறுத்தினார்.
ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற புயல் சின்னம் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையத்திலிருந்து தகவல் வரப்பெற்றுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்புடைய அலுவலர்கள் செய்ய வேண்டும்.
அனைத்து மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அவர்களின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் இயற்கை பேரிடர் முன்னெச்சரிக்கை தகவல்களை அறிந்து கொள்ள ஏதுவாக பசநஙஅதப என்ற செயலியை தங்களது திறன்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மாவட்ட நிலை அலுவலர்கள், இரண்டாம் நிலை மற்றும் கள அலுவலர்கள் அனைவரும் விடுமுறை நாட்களிலும், தங்களது தலைமையிடத்தில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும்.
வருவாய் கோட்ட அலுவலர்கள் மற்றும் வட்ட அலுவலகங்களில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்தி அதில் பணியாளர்களை முழுநேரமும் இருக்குமாறு சுழற்சி முறைப் பணியில் பணியாற்ற வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள 14 புதிய பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 8 இதர புயல் பாதுகாப்பு மையங்களைப் புயல் நேரத்தில் பொதுமக்களைத் தங்க வைப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புயல் பாதுகாப்பு மையங்களில் மின் விநியோகம், குடிநீர் விநியோகத்தைச் சீர் செய்து ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக் கட்டடங்களிலும் அவசர காலத்தில் பொதுமக்களைத் தங்க வைப்பதற்கு ஏதுவாக அவற்றை சுத்தம் செய்து, குடிநீர் மற்றும் மின்சாரம் தடையில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புயலால் விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு ஏதுவாக மரம் அறுக்கும் கருவிகள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களை அந்தந்த வட்டங்களில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
புயலால் சாய்ந்து விழும் மின் கம்பங்களைச் சீர் செய்யத் தேவையான பணியாளர்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புயலால் மின் தடை ஏற்படும் பட்சத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் நீர் ஏற்ற ஏதுவாக பவர் ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
புயல் எச்சரிக்கை அறிவிக்கப்படும் நேரத்தில் மீனவர்கள் எவரும் மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் 24 மணிநேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், ஆம்புலன்ஸ் வாகனங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், கஜா புயல் மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு கூடுதல் திட்ட இயக்குநர் ராஜகோபால் சுங்காரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பி. மந்திராசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.