மே தின விழாவை இணைந்து நடத்த ஏஐடியுசி, சிஐடியு முடிவு
By DIN | Published On : 26th April 2019 05:13 AM | Last Updated : 26th April 2019 05:13 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டத்தில் மே தின விழாவைக் கூட்டாக நடத்துவது என ஏஐடியுசி, சிஐடியு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
தஞ்சாவூரில் ஏஐடியுசி மற்றும் சிஐடியு நிர்வாகிகள் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
மே நாளையொட்டி மாவட்டம் முழுவதும் மே 1-ம் தேதி காலை அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பணியாற்றும் பகுதிகளில் கொடியேற்றி, உறுதிமொழி ஏற்று சிறப்பாகக் கொண்டாடுவது, மாலை 5 மணிக்கு தஞ்சாவூரில் மே தின பேரணியும், பின்னர் பனகல் கட்டடம் முன் பொதுக் கூட்டமும் நடத்துவது, இக்கூட்டத்தில் ஏஐடியுசி சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி. பழனிசாமி, சிஐடியு சார்பில் மாலதி சிட்டிபாபுவை சிறப்புரையாற்றச் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலர் சி. ஜெயபால் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம், மாவட்டத் தலைவர் வெ. சேவையா, சிஐடியு மாவட்டத் துணைச் செயலர் கே. அன்பு, அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற் சங்கத் தலைவர் துரை. மதிவாணன், வங்கி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.