கீழ வன்னிப்பட்டு ஏரியைத் தூர்வார அனுமதிக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்நதாடு அருகே உள்ள கீழ வன்னிப்பட்டு ஏரியைத் தூர் வார அனுமதிக்க வேண்டும் என அக்கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்நதாடு அருகே உள்ள கீழ வன்னிப்பட்டு ஏரியைத் தூர் வார அனுமதிக்க வேண்டும் என அக்கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கீழ வன்னிப்பட்டு பாசனதாரர் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம்,  செயலர் கோவிந்தராஜ்,  பொருளாளர் சுதாகர், துணைத் தலைவர் மகாலிங்கம் மற்றும் விவசாயிகள் அளித்த மனு:
கீழ வன்னிபட்டு ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தேவர்குளம்,  பாலக்குழி குளம், ஆதிதிராவிடர் குளம் ஆகியவற்றை கீழ வன்னிப்பட்டு கிராமத்தில் உள்ள பாசனதாரர்கள் சங்கம் மூலம் பொதுமக்கள் தூர்வாருவதற்கு உள்ளாட்சித் துறைத் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும். இதேபோல, கீழ வன்னிப்பட்டு கிராமத்தில் சுமார் 150 ஆழ்குழாய் கிணறுகள் விவசாயத்துக்காகப் பயன்பாட்டில் உள்ளது. 
இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து சில நேரங்களில் குடிநீர் கூட கிடைக்காமல் தவிக்கும் சூழல் உள்ளது. எங்களது கிராமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய நிலப்பரப்பு கொண்ட வெள்ளாளன்குளம், சாவடிகுளம் மற்றும் குட்டைகளை உள்ளடக்கிய கீழவன்னிப்பட்டு பெரிய ஏரியானது 16.97 ஹெக்டேர் பரப்பளவில் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியை வன்னிப்பட்டு பாசன தாரர்கள் சங்கம் மூலமாகத் தூர்வாருவதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர். 
மேலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் துணை பொதுச் செயலர் துரை. மதிவாணன் அளித்த மனு:
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள் இயக்கப்படும் இடத்தில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் இருந்தது. தற்போது அந்த இருசக்கர வாகன நிறுத்தகம் எதிரே உள்ள வளாகத்துக்குச் சென்றுவிட்டது. நகரப் பேருந்துகள் குறுகிய இடத்தில் இயக்கப்பட்டு வந்ததால், அவ்வப்போது சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது இரு சக்கர வாகன நிறுத்தும் இடம் காலியாக உள்ளதால், அந்த இடத்தை நகரப் பேருந்துகள் முழுவதுமாகப் பயன்படுத்தி கொள்ள ஏற்பாடு செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com