ஆட்சியரக வளாகத்தில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 12th February 2019 08:52 AM | Last Updated : 12th February 2019 08:52 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த கிராம மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றியச் செயலர் ஆர். ராமச்சந்திரன் தலைமையில் தீட்சசமுத்திரம் ஊராட்சி மக்கள் மனு அளிக்க வந்தனர். அப்போது, தீட்ச சமுத்திரம் ஊராட்சியில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர், கூட்டத்தில் அளித்த மனு:
பூதலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தீட்சசமுத்திரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. எனவே, ஆட்சியர் சிறப்புக் கவனம் செலுத்தி, ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து, சாதாரண மக்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை முறையாகச் சென்றடையச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
திடீர் தர்னா:
இதேபோல, ஆட்சியரகத்தில் மனு அளிக்க வந்த பெண் திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார். தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் இளைஞர் மீது புகார் செய்ததாகவும், அதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினார். இவரை போலீஸார் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.