திருபுவனம் கைது சம்பவம்: ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுப்பு
By DIN | Published On : 12th February 2019 08:55 AM | Last Updated : 12th February 2019 08:55 AM | அ+அ அ- |

திருபுவனம் கொலை வழக்கில் இஸ்லாமியர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து தஞ்சாவூரில் திங்கள்கிழமை மாலை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்துக்குக் காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.
திருபுவனத்தில் நிகழ்ந்த கொலை வழக்குத் தொடர்பாக இஸ்லாமியர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஜனநாயக அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்தன.
ஆனால், இதற்குக் காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை.
எனவே, ரயிலடியிலும், ஆற்றுப்பாலம் அருகேயுள்ள ஜூம்மா பள்ளிவாசல் முன்பும் திங்கள்கிழமை பிற்பகல் அதிக அளவில் காவலர்கள் நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், ஜூம்மா பள்ளிவாசல் அருகிலிருந்து சுமார் 25 பேர் ஊர்வலமாக ரயிலடி நோக்கிப் புறப்பட முயன்றனர்.
இவர்களைக் காவல் துறையினர் அனுமதி இல்லை எனக் கூறி தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவரை சந்தித்து, முறையாக அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என
முடிவு செய்து, கலைந்து சென்றனர்.