பாபநாசம் 108 சிவாலயம் கோயில் கும்பாபிஷேக விழா
By DIN | Published On : 12th February 2019 08:57 AM | Last Updated : 12th February 2019 08:57 AM | அ+அ அ- |

பாபநாசம் 108 சிவாலயம் என அழைக்கப்படும் அருள்மிகு பர்வதவர்த்தினி அம்மன் உடனுறை அருள்மிகு ராமலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணி வேலைகள் தொடங்கி நடைபெற்று அண்மையில் நிறைவடைந்தன.
இதையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த 8ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, மகா கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
திங்கள்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து யாத்ராதானம், கடம் புறப்பாடு செய்து சிவாச்சாரியார்களால் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதன் பிறகு, ராமலிங்க சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் உள்ளிட்டோருக்கு மகா அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை சுவாமி அம்மன் ஆகியோருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், இந்து சமய அறநிலையத் துறை தஞ்சாவூர் இணை ஆணையர் ஜி.தென்னரசு, உதவி ஆணையர்கள் தஞ்சாவூர் செ. சிவராம் குமார்,திருவாரூர் கிருஷ்ணன், ஆலங்குடி தமிழ்ச்செல்வி, பாபநாசம் நீதிபதி எஸ். ராஜசேகர், வேளாண் அமைச்சரின் மனைவி பானுமதி துரைக்கண்ணு, காவல் துணை கண்காணிப்பாளர்கள் நந்தகோபால், நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் க. சிவகுமார், ஆய்வாளர் எஸ். உமாராணி, கணக்கர் டி. முருகபாண்டி மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் பணியாளர்கள், கிராமத்தினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.