பெண்கள் கல்லூரியில் கருத்தரங்கு
By DIN | Published On : 12th February 2019 08:54 AM | Last Updated : 12th February 2019 08:54 AM | அ+அ அ- |

ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புப் பெண்கள் கல்லூரியில் நில அளவீடுகள் பற்றிய கருத்தரங்கு நிலத்தியல் துறையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் நில அளவீடுகள் பற்றிய பயிற்சி எடுத்துரைக்கப்பட்டது. கருத்தரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் மலர்விழி தலைமை வகித்தார். கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை உதவிப் பேராசிரியர் யுவராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு விளக்க உரைகளும், களப்பயிற்சிகளும் பயிற்றுவித்தார்.
விழாவை நிலத்தியல் துறை தலைவர் சி. சித்ரா, உதவிப் பேராசிரியை ப. காமாட்சி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். மேலும், கல்லூரியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மணிமேகலை, கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.
2 நாள்கள் நடைபெற்ற இக்கருத்தரங்கில் மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
கருத்தரங்கில், முந்தைய காலங்களில் நிலங்களை அளவீடு செய்ய நாம் மேற்கொண்ட அடிப்படை அளவீட்டு முறைகள் முதற்கொண்டு இன்றைய நவீன கால செயற்கைக்கோள் அளவீடுகள் வரையிலான நில அளவைகளின் அடிப்படை நுணுக்கங்கள்;
பல்வேறு வகையிலான அளவை முறைகள், அளவைக்கு பயன்படுத்தப்படும் பாரம்பரிய மற்றும் நவீனக் கருவிகள் போன்றவற்றைப் பற்றி விளக்கங்களும், கணக்கீடுகளும் செய்முறைப் பயிற்சிகளும் இக்கருத்தரங்கின் மையப் பொருளாகும். நிலத்தியல் சார்ந்த மேற்படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வும் இக்கருத்தரங்கில் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.