மூன்று பெருமாள் கோயில்களில் மாசிமகப் பெருவிழா தொடக்கம்
By DIN | Published On : 12th February 2019 08:57 AM | Last Updated : 12th February 2019 08:57 AM | அ+அ அ- |

கும்பகோணத்தில் உள்ள 3 பெருமாள் கோயில்களில் மாசிமகப் பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணம் நகரில் உள்ள ஐந்து முக்கிய வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக சக்கரபாணி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசிமகத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை காலை கொடி மரம் அருகே சக்கரபாணி சுவாமி சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் எழுந்தருளினார். அப்போது கொடி மரத்துக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கருடன் உருவத்துடன் கூடிய கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து, பிப். 21-ம் தேதி வரை சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது. பிப். 19-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்குள் மாசி மகத்தை முன்னிட்டு விஜயவல்லி, சுதர்சனவல்லி தாயாருடன் சக்கரபாணி சுவாமி தேரில் எழுந்தருளுகிறார்.
காலை 8 மணிக்கு திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை காவிரி சக்கர படித்துறையில் சக்கரராஜா தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. இதேபோல, ராஜகோபால சுவாமி கோயிலில் கொடிமரம் அருகே திங்கள்கிழமை காலை ருக்மணி, சத்யபாமாவுடன் ராஜகோபால சுவாமி எழுந்தருளினார். இதையடுத்து, மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆதிவராக பெருமாள் கோயில் கொடிமரம் அருகே பெருமாள் அம்புஜவல்லித் தாயாருடன் எழுந்தருளியதைத் தொடர்ந்து, கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.