கும்பகோணத்தில் தடை செய்யப்பட்ட 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
By DIN | Published On : 04th January 2019 08:42 AM | Last Updated : 04th January 2019 08:42 AM | அ+அ அ- |

கும்பகோணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அலுவலர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ரூ. 50,000 அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் ஜன. 1-ம் தேதி முதல் பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கும்பகோணம் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தி வருவதாக நகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து, நகராட்சி நகர் நல அலுவலர் பிரேமா, ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், சுவாமிநாதன், முருகானந்தம், மணிகண்டன், அருள்தாஸ் உள்ளிட்டோர் புதன்கிழமை திடீர் சோதனை செய்து சுமார் 3 டன் பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்து ரூ. 30,000 அபராதம் விதித்தனர்.
இதைத்தொடர்ந்து 2-வது நாளாக வியாழக்கிழமை கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட பெரிய தெரு, நாகேசுவரன் வடக்கு வீதி, பெரிய கடைத்தெரு, ராமசாமி கோயில் தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகள், ஹோட்டல் உள்ளிட்ட 20-க்கும் அதிகமான கடைகளில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அனுமதியின்றி பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகள் உள்பட தடை செய்யப்பட்ட 10 டன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு, ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...