நடுவிக்கோட்டையில் நிவாரணம் கோரி மறியல்
By DIN | Published On : 04th January 2019 08:42 AM | Last Updated : 04th January 2019 08:42 AM | அ+அ அ- |

ஒரத்தநாடு வட்டம், வாட்டாத்திக்கோட் டை காவல் சரகத்துக்குள்பட்ட நடுவிக்கோட்டை கிராமத்தில் நிவாரணப் பொருள்கள் கிடைக்காததை கண்டித்தும், நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்க கோரியும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் உதயசூரியபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நடுவிக்கோட்டை கிராமத்தில் கஜா புயலின்போது, ஏராளமான ஓட்டுவீடுகள், கூரை வீடுகள், தென்னை மரங்கள் காற்றில் விழுந்து சேதமடைந்தன.
இதனால், பொதுமக்கள் பலரும் வீடுகள் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசின் நிவாரண பொருள்கள் வழங்கப்படவில்லை எனவும், மேலும் சேதமடைந்த வீடுகளுக்கான உரிய நிவாரண தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனவும் கூறி, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உதயசூரியபுரத்தில் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அருள்ராஜ், வாட்டாத்திக்கோட்டை போலீஸார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.
மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.