குடிமராமத்து திட்டம்: ஏரிகளில் தூர்வாரும் பணி தொடக்கம்
By DIN | Published On : 03rd July 2019 08:58 AM | Last Updated : 03rd July 2019 08:58 AM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை வட்டம், ஆண்டிக்காடு கழனியாக்குளம் ஏரி, ஒரத்தநாடு வட்டம் முள்ளூர்பட்டிக்காடு முள்ளேரி ஆகிய ஏரிகளில் 2019-20ஆம் ஆண்டுக்கான குடிமராமத்துப் பணிகளை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
கல்லணைக் கால்வாய் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 524 ஏரிகள் வாயிலாக 23,419 ஏக்கர் நிலங்களும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 170 ஏரிகள் வாயிலாக 8,541 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், தமிழக முதல்வரின் 2019-2020 குடிமராமத்து திட்டத்தின்கீழ் கல்லணைக் கால்வாய் கோட்டத்துக்குள்பட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் 24 பணிகளுக்கு ரூ. 777 லட்சத்துக்கு ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதில், பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள 272 ஏரிகளில் ஆண்டிக்காடு கிராமத்தில் உள்ள கழனியாக்குளம் ஏரியை புனரமைக்க ரூ.63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏரியின் கரையை பலப்படுத்துதல், ஏரியின் பாசன மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், வடிகால் வாரியை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள்
மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேபோல், ஒரத்தநாடு வட்டம், முள்ளூர்பட்டிக்காடு முள்ளேரி ஏரியில் பாலம், குழாய் மதகு மறுசீரமைத்தல், 2 மதகுகள் பழுதுபார்த்தல், படிக்கட்டு புதுப்பித்தல், கரைகளை பலப்படுத்துதல் மற்றும் வடிகால் வாய்க்காலை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதற்காக கழனியாக்குளம் ஏரி, முள்ளேரி ஏரி பாசன விவசாயிகளைக் கொண்டு பாசனதாரர்கள் சங்கம் அமைத்து, அச்சங்கத்தின் மூலம் புனரமைப்புப் பணிகள் செயல்படுத்தப்படவுள்ளன.
முன்னதாக, ஆட்சியர் தலைமையில் பொதுபணித்துறை அலுவலர்கள் பங்கேற்ற விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இதில் கல்லணைக் கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர்கள் அன்பரசன், சண்முகவேல், உதவிப் பொறியாளர்கள்
நாராயணசாமி, பிரசன்னா, ராஜமாணிக்கம், திலீபன், வட்டாட்சியர்கள் அருள்பிரகாசம் (பட்டுக்கோட்டை), அருள்ராஜ் (ஒரத்தநாடு) மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.