தஞ்சாவூரில் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 18th June 2019 08:43 AM | Last Updated : 18th June 2019 08:43 AM | அ+அ அ- |

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவ சங்கத்தினரும், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினரும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி இறந்ததைத் தொடர்ந்து, இரு பயிற்சி மருத்துவர்கள் உறவினர்களால் தாக்கப்பட்டனர். இதைக் கண்டித்து, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்திலும் திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது. இதன்படி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினர். மேலும், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ. அன்பழகன், செயலர் ஏ. ராஜேந்திரன், பொருளாளர் ஏ. வினோத், இந்திய மருத்துவர் சங்க நிர்வாகி மாரிமுத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல, அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவனைகள் ஆகியவற்றிலும் மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினர்.