பெண்கள், குழந்தைகள் விடுதிகள் இல்லங்கள் பதிவு செய்வது கட்டாயம்
By DIN | Published On : 06th March 2019 09:49 AM | Last Updated : 06th March 2019 09:49 AM | அ+அ அ- |

பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் இல்லங்கள் பதிவு செய்வது கட்டாயம் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனம் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்ற இன்ன பிற நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் பெண்கள், குழந்தைகள் தங்கும் விடுதிகள், இல்லங்களைத் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (நெறிமுறைப்படுத்துதல்) சட்டம் 2014 நடைமுறைப்படுத்தத் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (நெறிமுறைப்படுத்துதல்) விதிகள் 2015 தமிழ்நாடு அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. விதிகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரு மாதங்களுக்காகத் தற்போது நடைமுறையில் செயல்பட்டு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்களை மாவட்ட ஆட்சியரின் உரிமம் இச்சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பெற வேண்டும்.
இதற்கு பிறகு தொடங்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் இச்சட்டத்தின்கீழ் ஆட்சியரின் அங்கீகாரம் பெற்ற பின்னர்தான் தொடங்கப்பட வேண்டும்.
இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போதும் வேறு அமலில் உள்ள சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் இச்சட்டத்தின் பிரிவு 12-ன் கீழ் ஆட்சியரின் பதிவை 6 மாதத்துக்குள்ளாக விண்ணப்பித்து உரிய பதிவு சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.18 வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டு விடுதிகள் நடத்துபவர்கள் விடுதி உரிமம் பெற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மூலமும் 18 வயதுக்கு அதிகமான பெண்களைக் கொண்டு விடுதி நடத்துபவர்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தச் சட்ட நடைமுறைகள் பின்பற்றாத விடுதிகள் மற்றும் இல்லங்கள் உடனடியாக மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் நிர்வாகிகள் மீது இச்சட்டப்பிரிவு 20-ன் கீழ் காவல் துறையின் மூலம் வழக்குப் பதிவு செய்யப்படும். இதற்கான தண்டனை 2 ஆண்டு காலம் சிறை தண்டனை மற்றும் ரூ. 50,000 அபராதம், இரண்டாவது முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டால் தண்டனை 3 ஆண்டு காலம் மற்றும் ரூ. ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.