8 மூட்டை பூஜை உபகரணங்கள், ரூ.2.39 லட்சம் பறிமுதல்

தஞ்சாவூரில் உரிய ஆவணங்களின்றி 8 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட குத்துவிளக்குகள்  உள்ளிட்ட பூஜைப் பொருள்கள்
Published on

தஞ்சாவூரில் உரிய ஆவணங்களின்றி 8 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட குத்துவிளக்குகள்  உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் மற்றும் ரூ. 2.39 லட்சம் ரொக்கத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பெங்களூருவிலிருந்து தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையப் பகுதிக்கு வியாழக்கிழமை காலை ஆம்னி பேருந்து வந்தது. இப்பேருந்தைச் சிறப்பு வட்டாட்சியர் சுஜாதா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அப்போது, பின்புறமுள்ள சரக்கு வைப்பகத்தில் 8 முட்டைகளில் குத்துவிளக்குகள், மணிகள் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் இருப்பதும், இந்த மூட்டைகள் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் உள்ள மெட்டல்ஸ் நிறுவனத்துக்குக் கொண்டு செல்லப்படுவதும் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால், இரு மூட்டைகளுக்கான ரசீது மட்டுமே இருந்தது. மீதமுள்ள மூட்டைகளுக்கான ரசீது இல்லை.
எனவே, 8 மூட்டைகளையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மீதமுள்ள 6 மூட்டைகளுக்கான ரசீதை கொண்டு வருவதாக உடைமையாளர் கூறிச் சென்றார்.
இதேபோல,  தஞ்சாவூர் எம்.கே.எம். சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை மாலை வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். 
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் சோதனையிட்டபோது அவர் வைத்திருந்த பையில் ரூ. 2.39 லட்சம் இருப்பதும், பழைய பேருந்து நிலையத்திலுள்ள துணிக் கடையிலிருந்து வங்கிக்குப் பணம் எடுத்துச் செல்வதும், அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரிய வந்தது.  
இதையடுத்து இப்பணம் தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து வருவாய்த் துறையினர் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com