வேட்பு மனுக்கள் பரிசீலனை: சட்டப்பேரவைத் தொகுதியில் 14 மனுக்கள் ஏற்பு
By DIN | Published On : 28th March 2019 07:47 AM | Last Updated : 28th March 2019 07:47 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீது புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டன.
தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து மார்ச் 26-ம் தேதி வரை மொத்தம் 21 பேர் 26 மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சி. சுரேஷ் தலைமையிலும், வேட்பாளர்கள், அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில், வேட்பாளர்களான ஆர். காந்தி (அதிமுக), டி.கே.ஜி. நீலமேகம் (திமுக), மோ. கார்த்தி (நாம் தமிழர்), சுயேச்சை வேட்பாளர்களான எம். ரெங்கசாமி (அமமுக), எம்.என். சரவணன் (சமாஜ்வாடி பார்வர்டு பிளாக்), எம். சந்தோஷ், டி. தினேஷ்பாபு, எம். பாபுஜி, ஆர். சப்தகிரி, பூ. துரைசாமி, ப. ராஜேஸ்வரன், பொ. பழனிவேல், எ. ரெங்கசாமி, க. செல்வராஜ் ஆகிய 14 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேச்சையாக தாக்கல் செய்யப்பட்ட 7 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மேலும், திமுக, அதிமுக வேட்பாளர்களின் கூடுதல் மனுக்கள், மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் என மொத்தம் 5 மனுக்கள் தள்ளுபடியானது. தற்போதைய நிலவரப்படி, வேட்பாளர் பட்டியலில் மொத்தம் 14 பேர் இடம் பெற்றுள்ளனர். வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே இறுதி வேட்பாளர்கள் விவரம் தெரிய வரும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...