சிலை செய்வதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் ஆணையர் வீரசண்முகமணிக்கு கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் சோமஸ்கந்தர், அம்மன் சிலைகளைப் புதிதாக செய்வதில் முறைகேடு ஏற்பட்டதாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மார்ச் 15-ம்தேதி வீரசண்முகமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், வீரசண்முகமணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஜாமீன் பெறப்பட்டது. அந்த ஜாமீனை கும்பகோணம் நீதிமன்றத்தில் அளித்து, அந்த நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நடந்து கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, திருச்சி சிறையில் உள்ள வீரசண்முகமணியிடம் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் படி, இரு நபர் ஜாமீன்தாரர்களாக வீரசண்முகமணியின் உறவினர்கள் இருவரை நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
அப்போது அவர்களிடம் நீதிபதி விசாரித்துவிட்டு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணைக்கு வீரசண்முகமணி ஒத்துழைக்க வேண்டும் என்றும், சம்மன் அனுப்பினால் உடனே ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனையுடன் நீதிபதி ஜாமீன் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.