அரசு, அரசு உதவி பெறும் தொழிற் பயிற்சி நிலையங்கள், தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கு இணையவழி மூலம் மே 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசுத் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தொழிற் பயிற்சி நிலையங்கள், தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்ந்திடவும் மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8,10,12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எட்டாம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை ஒரே விண்ணப்பத்தில் நிறைவு செய்ய வேண்டும். விண்ணப்பத்தை அச்சு எடுத்து அருகில் உள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் கொடுத்து சரி பார்த்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகளுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்கக் கையேட்டில் தரப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கக் மே 31 கடைசி நாளாகும்.
விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களுக்கும் தனித்தனி விண்ணப்பங்களை அளிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான நாள், நேரம், இடம் பின்னர் தெரிவிக்கப்படும்.