பரக்கலாக்கோட்டை கோயில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 15th May 2019 08:40 AM | Last Updated : 15th May 2019 08:40 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள பரக்கலாக்கோட்டை கோயில் செயல் அலுவலர் மீதான முறைகேடு தொடர்பான புகாரைத் தொடர்ந்து திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பரக்கலாக்கோட்டையில் பொது ஆவுடையார்கோயில் உள்ளது. இக்கோயிலில் செயல் அலுவலராக ஜி. சம்பத்குமார் பணியாற்றி வருகிறார். இவர் உரிய அனுமதியின்றி செலவு செய்ததாகவும், அதற்குரிய கணக்குத் தாக்கல் செய்யாமல் முறைகேடு செய்ததாகவும் அறநிலையத் துறை உயர் அலுவலர்களுக்குப் புகார் சென்றது.
இதன்பேரில், அறநிலையத் துறை உயர் அலுவலர்கள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து சம்பத்குமார் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து அறநிலையத் துறையின் தஞ்சாவூர் மண்டல இணை ஆணையர் தென்னரசு கூறுகையில், சம்பத்குமார் மீது முறைகேடு தொடர்பாக புகார் வந்தது. இதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இதில், முறைகேடு தொடர்பாக முகாந்திரம் இருந்ததைத் தொடர்ந்து, ஆணையருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றார் அவர்.