பள்ளி வாகனங்கள் ஆய்வு: 15 வாகனங்களில் குறைபாடு
By DIN | Published On : 15th May 2019 08:43 AM | Last Updated : 15th May 2019 08:43 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 15 வாகனங்களில் குறைபாடு இருப்பது தெரிய வந்தது.
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு அரசுச் சிறப்பு விதிகளின்படி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, 252 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில், பள்ளி வேன்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் அவசர கால வழி, தீயணைக்கும் கருவி, இருக்கைகள், வாகனத்தின் வேக அளவு, ஓட்டுநர் உரிமம் அனுபவம் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் 15 வாகனங்கள் குறைபாடுகளுடன் இருப்பது தெரிய வந்தது. இவற்றுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, குறைகளைச் சரி செய்து மீண்டும் காண்பிக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் என். கார்த்திகேயன் தெரிவித்தார். மேலும், தீ விபத்து குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் எம். இளஞ்செழியன் விவாதித்து தீ ஏற்பட்டால் எப்படி அணைப்பது என்பது பற்றி விளக்கினார். சாலை விபத்து ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி செய்வது குறித்து 108 ஆம்புலன்ஸ் சார்பில் விஜய் பாஸ்கர் விளக்கம் அளித்தார். அனைத்து ஓட்டுநர்களுக்கும் சாலை விதிகளை மதித்து செயல்படவும், விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கவும் துணைப் போக்குவரத்து ஆணையர் எஸ். உதயகுமார் அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், முதன்மைக் கல்வி அலுவலர் பெ. சாந்தா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜி. நெடுஞ்செழியபாண்டியன், எஸ். குண்டுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.