சரசுவதி மகால் நூலகத்தில் இலக்கிய நிகழ்வு தொடக்கம்
By DIN | Published On : 19th May 2019 08:41 AM | Last Updated : 19th May 2019 08:41 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் மாதம் ஒரு இலக்கிய நிகழ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பன்மொழிகளின் கருவூலமாகத் திகழ்ந்து வரும் இந்நூலகத்தில் சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மராட்டி ஆகிய மொழிச் சுவடிகளும், ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலி போன்ற உலக மொழிகளின் நூல்களும் இடம்பெற்றுள்ளன.
இந்நூலகத்தில் தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, மராட்டி ஆகிய மொழிகளில் மாதம் ஒரு இலக்கிய நிகழ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் ஒரு மொழி என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக மராட்டி மொழிப் பிரிவின் கீழ் மாதம் ஒரு இலக்கிய நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் மாராட்டிய மன்னர் கால இசை நாட்டிய நாடகங்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், தஞ்சை மராட்டிய மன்னர்களும், பன்மொழிப் புலவர்களும் இயற்றிய மராட்டிய நாட்டிய நாடகங்களில் காணப்படும் பாத்திரப் படைப்பு, சொற்கட்டு, ஸ்வர ஜதிகள், ஐந்து விதமான ஜக்கினி தருக்கள், விரக பதங்கள் மற்றும் நட்டுவாங்க மரபு அபிநயங்கள் குறித்து முன்னாள் வடமொழி பண்டிதர் என். ஸ்ரீனிவாசன் சிறப்புரையாற்றினார். நூலகர் எஸ். சுதர்ஷன் தொடக்கவுரையாற்றினார். முதன்மைக் கல்வி அலுவலரின் உதவியாளர் எம். ரவிச்சந்திரன், பண்டிதர்கள் ஆர். வீரராகவன் (சம்ஸ்கிருதம்), பீ. ராமச்சந்திரன் (மராட்டி), மணி. மாறன் (தமிழ்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.