"மண் வளம் காக்க, மகசூல் அதிகரிக்க தக்கைப்பூண்டு சாகுபடி செய்வது அவசியம்'
By DIN | Published On : 19th May 2019 08:44 AM | Last Updated : 19th May 2019 08:44 AM | அ+அ அ- |

மண் வளம் காக்கவும், பயிர் மகசூலை அதிகரிக்கவும் விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிரான தக்கைப்பூண்டு சாகுபடியை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்றார் மதுக்கூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திலகவதி. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்ணின் கார, அமிலத் தன்மைகள் மாறுகின்றன. மேலும், நிலத்தில் உப்பின் அளவு அதிகரிக்கிறது. தொடர்ந்து சாகுபடி செய்வது, ரசாயன உரங்களை பயன்படுத்துவது ஆகியவற்றால் மண்ணின் தன்மை மாறி, அங்கக சத்துகள் குறைந்து, மண் வளமற்றதாகி விடுகிறது. ஆகையால், மண்வளத்தை அதிகரிக்கச் செய்ய விவசாயிகள் நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் விடும் முன்னர் தக்கைப்பூண்டு பயிரிட வேண்டும்.
இதற்காக ஏக்கருக்கு 20 கிலோ விதைகளை விதைக்க வேண்டும். தக்கைப்பூண்டு களிமண் பகுதிக்கு ஏற்றது. 35 முதல் 40 நாள்களில் பூக்கும் தருணத்தில் இதனை மடக்கி உழுது, மண்ணுக்கு அடி உரமாக மாற்றிவிட வேண்டும். அதன்பின்னர், எந்த பயிரை சாகுபடி செய்தாலும் மண்வளம் பெற்று விவசாயம் செழிக்க ஆரம்பிக்கும். ஏக்கருக்கு சுமார் 20-25 டன்கள் வரை தழைகள் கிடைக்கும்.
பசுந்தாள் பயிரான தக்கைப்பூண்டு மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தும் பண்புடையதால் ஆண்டுக்கு ஒருமுறை இப்பயிரை சாகுபடி செய்ய வேண்டும். இதனால் அடுத்த பயிருக்கான உரத்தேவை 40 முதல் 60 சதவீதம் வரை குறையும். தக்கைப்பூண்டு மண்ணின் இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகளை உயர்த்தி, காரத்தன்மை உடைய நிலத்தை நடுநிலைப்படுத்தும். மண்ணில் பொதுபொதுப்பான தன்மை மற்றும் காற்றோட்டத்தை அதிகப்படுத்தி, மண் அரிப்பையும் தடுக்கிறது. எனவே, விவசாயிகள் நடவுப் பருவத்தில் நெல் சாகுபடி செய்வதற்கு முன்பாக, நடவு வயலில் தக்கைப்பூண்டு பயிரிட்டு மடக்கி உழுத பின், ஒற்றை நெல் சாகுபடி முறைகளை கையாண்டால் நிச்சயம் கூடுதல் மகசூல் பெறலாம்.