சரபோஜி கல்லூரியில் ஜூன் 3-இல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்
By DIN | Published On : 26th May 2019 02:50 AM | Last Updated : 26th May 2019 02:50 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கலைக் கல்லூரியில் ஜூன் 3-ஆம் தேதி முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் வெ. செந்தமிழ்செல்வி தெரிவித்திருப்பது: ஜூன் 3 காலை 9 மணிக்கு அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர் சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சேர்க்கையும், அதைத் தொடர்ந்து பி.லிட். தமிழ் இலக்கியம், பி.ஏ. ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவுகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கில பாட மதிப்பெண் அடிப்படையில் நடைபெறவுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி பி.எஸ்சி. அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் 400 முதல் 250 வரையிலான மதிப்பெண் அடிப்படையிலும் (தமிழ் மற்றும் ஆங்கிலம் மதிப்பெண் நீங்கலாக) நடைபெறவுள்ளது.
ஜூன் 6-ஆம் தேதி பி.எஸ்சி. அனைத்துப் பாடபிரிவுகளுக்கும் 250-க்கும் கீழ் உள்ள மதிப்பெண் அடிப்படையிலும் (தமிழ் மற்றும் ஆங்கில மதிப்பெண் நீங்கலாக) நடைபெறவுள்ளது. ஜூன் 7-ஆம் தேதி பி.ஏ. பொருளியல், பி.காம்., பி.பி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 400 முதல் 250 வரையிலான மதிப்பெண் அடிப்படையிலும் (தமிழ் மற்றும் ஆங்கிலம் மதிப்பெண் நீங்கலாக) நடைபெறவுள்ளது. ஜூன் 8-ஆம் தேதி பி.ஏ. பொருளியல், பி.காம்., பி.பி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 250-க்கும் கீழ் உள்ள மதிப்பெண் அடிப்படையிலும் (தமிழ் மற்றும் ஆங்கிலம் மதிப்பெண் நீங்கலாக) கலந்தாய்வு நடைபெறவுள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அவசியம் பெற்றோருடன் அல்லது பாதுகாவலருடன் வர வேண்டும்.