"வாசகர்கள் புரிந்து கொள்ளும் விதமான மொழியாக்கம் தேவை'

வாசகர்கள் புரிந்து கொள்ளும் விதமான மொழியாக்கம் அமைய வேண்டும் என்றார் தமிழ்ப் பல்கலைக்கழக உதவிப் பதிவாளரும்

வாசகர்கள் புரிந்து கொள்ளும் விதமான மொழியாக்கம் அமைய வேண்டும் என்றார் தமிழ்ப் பல்கலைக்கழக உதவிப் பதிவாளரும் (பணி நிறைவு), மொழிபெயர்ப்பாளருமான பா. ஜம்புலிங்கம்.
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தில் தமிழ்த் துறை சார்பில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற மாதம் ஓர் இலக்கிய நிகழ்வில் மொழிபெயர்ப்பில் எழும் சிக்கல்களும் தீர்வும் என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
மொழியாக்கத்தின்போது வாசகர்கள் மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் சொற்களைத் தெரிவு செய்து பயன்படுத்த வேண்டும்.
மொழியாக்கத்தில் உள்ள சிக்கல்களாகச் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கும்போது தெளிவின்மையையோ, மிகைப்படுத்தலையோ தரும். அதற்குத் தீர்வாகப் பொருளைப் புரிந்து சொற்றொடர் வாரியாகவோ,  பத்தி வாரியாகவோ மொழிபெயர்க்கலாம்.  மூல மொழியிலும், மொழிபெயர்க்கப்படும் மொழியிலும் மொழிபெயர்க்கும் திறன் சமமாக இருக்க வேண்டும். குறைவான சொற்களைக் கொண்ட சொற்றொடர் முழுமையான பொருளைத் தராதபோது இடத்துக்குத் தக்கவாறு சொற்றொடரை மாற்றி அமைக்கலாம்.
நீண்ட சொற்றொடர்களை மொழியாக்கம் செய்யும்போது எளிதில் புரியும் வகையில் சிறிய சொற்றொடர்களாகப் பிரித்து அமைத்துக் கொள்ளலாம். சமூகம் மற்றும் பண்பாடு என்ற சூழலில் தெளிவற்ற சொல் அமையும்போது,  மூலமொழியின் பொருண்மையின் பின்புலத்தை அறிய வேண்டும். கடினமான பொருள் தரும் சொல்லோ, பிற மொழிச் சொல்லோ மூலத்தில் இருந்தால் அதற்குப் பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்ய வேண்டும்.
மூலக்கட்டுரையின் நோக்கத்தை உள்வாங்கிக் கொள்ள இயலாத நிலை அமையும்போது, பல முறை படித்துவிட்டு மொழியாக்கம் செய்ய வேண்டும். மூலத்தில் குழப்பமோ, தெளிவின்மையோ இருந்தால் அதே தலைப்பில் அமைந்துள்ள பிற கட்டுரைகளை ஒப்புநோக்கலாம்.
தடித்த எழுத்து, ஒற்றை மேற்கோள், இரட்டை மேற்கோள் பயன்பாட்டை உள்ளடக்கிய செய்திகளை மொழியாக்கம் செய்யும்போது இடத்தின் தன்மை அறிந்து உணர்வை வெளிப்படுத்த வேண்டும். மொழியாக்கம் செய்வோர் அப்பணியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நாம் புரிந்துகொண்டதை அப்படியே வாசகர்களுக்குக் கடத்துவது மொழியாக்கம் இல்லை.
வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையில் மொழியாக்கம் அமைய வேண்டும். மொழியாக்கத்துக்கு அடிப்படையாக அமைவனவற்றில் வாசிப்பு முக்கியமானது. குறிப்பாக, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களைத் தொடர்ந்து விடுபாடின்றி படிப்பதன் மூலம் மொழியாக்கத்துக்கான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்றார் ஜம்புலிங்கம்.
இந்நிகழ்ச்சிக்கு முதன்மைக் கல்வி அலுவலரும், நூலக நிர்வாக அலுவலருமான (பொறுப்பு) பெ. சாந்தா தலைமை வகித்தார். நூலகர் எஸ். சுதர்ஷன், பண்டிதர்கள் மணி. மாறன் (தமிழ்), ஆ. வீரராகவன் (வடமொழி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com