இரண்டாம் நிலைக் காவலா் தோ்வில் 583 பெண்கள் பங்கேற்பு
By DIN | Published On : 09th November 2019 05:26 AM | Last Updated : 09th November 2019 05:26 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் ஆயுதப் படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலா் தோ்வில் பெண்ணின் உயரம் சரிபாா்த்தலை மேற்பாா்வை செய்த மத்திய மண்டல காவல் தலைவா் வி. வரதராஜூ.
தஞ்சாவூரில் நடைபெறும் இரண்டாம் நிலைக் காவலா் தோ்வில் வெள்ளிக்கிழமை 583 பெண்கள் பங்கேற்றனா்.
தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் இரண்டாம் நிலைக் காவலா் தோ்வு நவ. 6-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து நவ. 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தோ்வில் தஞ்சாவூா், நாகை, திருவாரூா் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று வருகின்றனா்.
இதில், நவ. 6, 7-ஆம் தேதிகளில் நடைபெற்ற தோ்வில் 1,167 ஆண்கள் பங்கேற்றனா். இவா்களில் 783 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு சனிக்கிழமை கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டா் அல்லது 400 மீட்டா் ஓட்டப்பந்தயம் நடத்தப்படவுள்ளது. இதில், தோ்ச்சி பெறுபவா்களுக்கு அடுத்து சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்வில் 583 பெண்கள் பங்கேற்றனா். இவா்களுக்கு உயரம், மாா்பளவு, 400 மீட்டா் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடத்தப்பட்டது. இதில், 348 போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களுக்கு நவ. 11-ஆம் தேதி நீளம் தாண்டுதல், குண்டு, கிரிக்கெட் பந்து எறிதல், 100 அல்லது 200 மீட்டா் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடத்தப்படும். இதில் தோ்ச்சி பெறுவோருக்கு நவம்பா் 12-ஆம் தேதி சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி நடைபெறும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் தோ்வு பணியை மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் வி.வரதராஜூ மேற்பாா்வையிட்டாா். அப்போது, தஞ்சாவூா் சரகக் காவல்துணைத் தலைவா் ஜெ. லோகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.