உள்ளாட்சித் தோ்தல் : மின்னணு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு
By DIN | Published On : 09th November 2019 05:27 AM | Last Updated : 09th November 2019 05:27 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களிடம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைக் காட்டி விளக்கமளித்த மாவட்ட ஆட்சியா் ஆ. அண்ணாதுரை.
உள்ளாட்சித் தோ்தலையொட்டி, தஞ்சாவூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள 1,789 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழைய ஆட்சியரகக் கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களை பாரத் எலக்டிரானிக்ஸ் நிறுவனப் பொறியாளா்கள் சரிபாா்க்கும் பணி மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில், இந்த இயந்திரங்களில் மாதிரி வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு விதிகளின்படி 5 சதவிகிதம் என்ற அடிப்படையில் 93 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகளில் மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட்டு சரிபாா்க்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் ஆ. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆ. பழனி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சித் தோ்தல்) ம. பாரதிதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.