வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உள்பட 11 பேர் மீது வழக்கு
By DIN | Published On : 01st September 2019 02:37 AM | Last Updated : 01st September 2019 02:37 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையைத் தொடர்ந்து 11 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது.
தஞ்சாவூர் அருகே திருச்சி சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகம் உள்ளது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள ஆய்வுக் குழுவினரின் அறிவுறுத்தலின்பேரில், இந்த அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு வரை ஏறத்தாழ 4 மணிநேரம் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கணக்கில் வராத ரொக்கம் ரூ. 2,86,990 பறிமுதல் செய்யப்பட்டது. இதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயனிடமிருந்து ரூ. 43,080-ம், கண்காணிப்பாளர் மீனாம்பாள், கணக்காளர் ராமசாமி அமர்ந்திருக்கும் அறையிலிருந்து ரூ. 40,642-ம், முதுநிலை வரைவாளர் வீரமணியிடமிருந்து ரூ. 24,220-ம் கைப்பற்றப்பட்டன. இதேபோல, இடைத்தரகர்களிடமிருந்து ரொக்கத்தை போலீஸார் கைப்பற்றினர்.
இதுதொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன், மீனாம்பாள், ராமசாமி, வீரமணி, இடைத்தரகர்கள் ஹரிஹரன், விஜயராஜ், முத்துக்குமார், ராஜாராம், கோகுல், வெங்கட்ராமன், செம்மனச்செம்மல் ஆகியோர் மீது கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தொகை கும்பகோணம் தனி நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. மேலும், இத்தொகை எப்படி? யாரிடமிருந்து? எதற்காக? வந்தது உள்ளிட்டவை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.