வேலை வாங்கித் தருவதாக ரூ. 24 லட்சம் மோசடி: ஆப்பிரிக்க நபர் மீது வழக்கு
By DIN | Published On : 02nd September 2019 06:07 AM | Last Updated : 02nd September 2019 06:07 AM | அ+அ அ- |

இணையவழியில் வேலைவாய்ப்பு விளம்பரத்தின் மூலம் தஞ்சாவூர் நபரிடம் ரூ. 23.90 லட்சம் மோசடி செய்த ஆப்பிரிக்க நபரை போலீஸôர் தேடுகின்றனர்.
தஞ்சாவூர் அருகேயுள்ள காவாரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் எம். மகாதேவன் (41). இவர் இணையவழியில் கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவது தொடர்பான விளம்பரத்தை ஜனவரி மாதத்தில் பார்த்தார்.
அதில், குறிப்பிடப்பட்டிருந்த செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்ட மகாதேவனிடம் இணையவழியில் பணம் செலுத்துமாறு மறுமுனையில் பேசிய நபர் கூறினார்.
இதையடுத்து, முதல் கட்டத் தொகையை இணையவழி மூலம் மகாதேவன் செலுத்தினார். பின்னர், பெங்களூரில் உள்ள முகவரியில் நேரில் வந்து இரண்டாம் கட்டத் தொகையைச் செலுத்துமாறு மறுமுனையில் பேசிய நபர் கூறியுள்ளார்.
பின்னர், மகாதேவன் பெங்களூருவுக்கு சென்று, அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜோடனிடம் இரண்டாம் கட்டத் தொகையை செலுத்தினார். மொத்தத்தில் ரூ. 23,90,400 செலுத்தியுள்ளார்.
ஆனால், இதுவரை மகாதேவனுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கவில்லை. மேலும், ஜேம்ஸ் ஜோடனை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் தன்னை ஆப்பிரிக்க நபர் மோசடி செய்திருப்பதை அறிந்த மகாதேவன் தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு காவல் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸôர் வழக்குப் பதிந்து ஆப்பிரிக்க நபரைத் தேடுகின்றனர்.