தஞ்சாவூரில் செப். 12, 13-இல் போக்குவரத்து மாற்றம்
By DIN | Published On : 11th September 2019 08:56 AM | Last Updated : 11th September 2019 08:56 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாநகரில் வியாழக்கிழமை (செப்.12), வெள்ளிக்கிழமை (செப்.13) சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பு. ஜானகி ரவீந்திரன் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மாநகராட்சியில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் நகரப் பேருந்துகளைப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை நெறிப்படுத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆலோசனை செய்யப்பட்டப்படி, செப். 12, 13-ம் தேதிகளில் சோதனை முறையில் போக்குவரத்து வழித்தடங்களை மாற்றம் செய்வது குறித்து முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து ரயிலடி வழியாக வெளியில் செல்லும் நகரப் பேருந்துகள் அனைத்தும் கொடிமரத்து மூலை, வெள்ளை பிள்ளையார் கோவில் ரவுண்டானா, தென் கீழ் அலங்கம், அண்ணா சிலை வழியாகச் சென்று ஜீ.வி. திரையரங்க வளாகம் அருகே அமைக்கப்படும் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும்.
மேம்பாலம் வழியாகச் செல்லும் நகரப் பேருந்துகள் அனைத்தும் கொடிமரத்து மூலை, வெள்ளை பிள்ளையார் கோவில் ரவுண்டானா, தென் கீழ் அலங்கம், அண்ணா சிலை வழியாகச் சென்று அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அருகில் அமைக்கப்படும் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும்.
ரயிலடி வழியாகத் தற்காலிகப் பேருந்து நிலையத்துக்கு வரும் நகரப் பேருந்துகள் அனைத்தும் ஆற்றுப்பாலம் ரவுண்டானா, நீதிமன்றச் சாலை, மேம்பாலம் சந்திப்பு, சோழன் சிலை பேருந்து நிறுத்தம் வழியாக பாரத ஸ்டேட் வங்கி அருகில்
அமைக்கப்படும் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும். மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையம், தெற்கு அலங்கம், வெள்ளை பிள்ளையார் கோவில் ரவுண்டானா, கொடிமரத்து மூலை வழியாகத் தற்காலிக பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டும்.
மேம்பாலம் வழியாக வரும் நகரப் பேருந்துகள் அனைத்தும் சோழன் சிலை பேருந்து நிறுத்தம் வழியாக வந்து பாரத ஸ்டேட் வங்கி அருகில் அமைக்கப்படும் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையம், தெற்கு அலங்கம், வெள்ளை பிள்ளையார் கோவில் ரவுண்டானா, கொடிமரத்து மூலை வழியாகத் தற்காலிகப் பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டும்.
கும்பகோணத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கரந்தை சி.ஆர்.சி., கிழக்குக் காவல் நிலையச் சாலை, வெள்ளை பிள்ளையார் கோவில் ரவுண்டானா, தென் கீழ் அலங்கம், அண்ணா சிலை வழியாகச் சென்று அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அருகில் அமைக்கப்படும் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டு, மேம்பாலம் வழியாகச் செல்ல வேண்டும்.
புதிய பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் வழித்தடத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் மேம்பாலம், சோழன் சிலை பேருந்து நிறுத்தம், மேல வீதி, வடக்கு வீதி, கொடிமரத்து மூலை, தற்காலிகப் பேருந்து நிலையம் வழியாகச் செல்ல வேண்டும்.